அமெரிக்காவில் 150 ஆண்டுகளில் இல்லாத பனிப்புயல் பாதிப்பு - 1100க்கும் மேற்பட்டோர் பலி; நியூயார்க்கில் அவசர நிலை - 13,000 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த அதீத பனிப்புயலால் நிலைகுலைந்துள்ளன. நியூயார்க் நகரில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளைத் தவிர மற்ற அனைத்துப் போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் மட்டும் 10,000-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படவில்லை. வடகிழக்கு அமெரிக்காவில் சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரில் மக்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர்.
பல பகுதிகளில் சாலைகள் தெரியாத அளவிற்கு 3 அடிக்கும் மேல் பனி குவிந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட வெளியே வர முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
கடுமையான காற்றுடன் அதிக பனியைப் பொழியும் 'பிளிசார்டு' (Blizzard) வகை புயல் எச்சரிக்கையை 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளை இந்த அளவிற்குத் தீவிரமாகத் தாக்கிய பனிப்புயல் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என வானிலை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலைமை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.