16,000 பேர் பலி... நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... ஐரோப்பாவில் கடும் வெப்ப அலையால் கதறும் மக்கள்!

 

வழக்கமாகக் குளிர்ந்த வானிலை கொண்ட ஐரோப்பிய நாடுகளில் வீசி வரும் கொடூரமான வெப்ப அலை காரணமாக 16,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை இந்த வெப்ப அலையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குளிர்ந்த பிரதேசமாகக் கருதப்படும் பெல்ஜியத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக நாட்டின் தெற்குப் பகுதியான வாலோனியாவில் வழக்கமான இறப்பு விகிதத்தை விட 77% உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

வெப்பப் பக்கவாதம் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தீவிரமடைந்ததால், அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவாகவே இதுபோன்ற தீவிரக் கோடைகால வெப்ப அலைகள் ஏற்படுவதாகக் காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் கோடைகாலம் இன்னும் மோசமான நிலையை எட்டக்கூடும் என்பதால், அனைத்து நாடுகளும் இத்தகைய தீவிர வானிலை சவால்களை எதிர்கொள்ளத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.