ஒரே நாளில் 1,838 கிலோவுக்கும் அதிகமான தேவையற்ற பொருட்கள் அகற்றம் - சென்னையில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!

 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீவிரக் களப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நேரடியாக வீடுவீடாகச் சென்று டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் பயன்பாடற்ற உபரிப் பொருட்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் சுமார் 500.9 கிலோ எடையிலான பயன்படுத்தப்பட்ட டயர்களும், 1,337.15 கிலோ எடையிலான பிற தேவையற்ற பொருட்களும் என மொத்தம் 1,838 கிலோவிற்கும் அதிகமான கழிவுகள் மாநகராட்சிப் பணியாளர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.