2 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்கள்... 92 வயதிலும் மருத்துவ சேவை - சாதனைப் படைத்த பெண் மருத்துவர்!

 

வயது என்பது வெறும் எண்தான் என்பதைத் தனது இடைவிடாத சேவையின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார் 92 வயதான தெலங்கானாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சூரி ஸ்ரீமதி.

ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் சூரி ஸ்ரீமதி, கடந்த 68 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். தனது அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ அனுபவத்தின் மூலம் வாழ்நாளில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான சுகப்பிரசவங்கள் மற்றும் மகப்பேறுகளைப் பார்த்துப் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார்.

92 வயதான போதிலும் ஓய்வெடுக்க விரும்பாமல், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நாள்தோறும் நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் அவசரக் காலங்களில் 'சிசேரியன்' உள்ளிட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் மிகத் துல்லியமாக மேற்கொண்டு அசத்தி வருகிறார். மருத்துவ உலகின் முன்மாதிரியாகத் திகழும் டாக்டர் சூரி ஸ்ரீமதியின் இந்த அசாத்திய சேவைக்கும், அர்ப்பணிப்பிற்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.