3 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்; 1,300 விமானங்கள் ரத்து... டால்பின் புயல் தாக்குதலில் நிலைகுலைந்த சீனா!
சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பலத்த காற்றுடன் கூடிய 'டால்பின்' புயல் தாக்கியதால், ஷாங்காயில் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜெஜியாங் மாகாணத்தின் தைஜோ நகரையும், புஜியானின் வடக்குப் பகுதிகளையும் தாக்கிய இப்புயல், கரையைக் கடந்தபோது மணிக்கு 151 கி.மீ (93 மைல்) வேகத்தில் பலத்த காற்றையும் பிரம்மாண்ட அலைகளையும் ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களில் 200 முதல் 400 மி.மீ வரை கனமழை பெய்யக்கூடும் எனச் சீன வானிலை மையம் கணித்துள்ளதால், ஜெஜியாங்கில் கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவைத் தாக்குவதற்கு முன், சனிக்கிழமையன்று இப்புயலின் வெளிப்பகுதிகள் வடக்கு தைவான் மற்றும் தலைநகர் தைபேவில் கனமழையை ஏற்படுத்தின. ஷாங்காயின் முக்கிய விமான நிலையங்களான ஹாங்கியாவோ மற்றும் புடாங் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை வரவிருந்த சுமார் 60 சதவீத விமானங்கள் (1,300-க்கும் மேல்) ரத்து செய்யப்பட்டன.
புயல் பாதிப்பு அதிகம் உள்ள தைஜோ நகரிலிருந்து 3,90,000 மக்களும், ஷாங்காயிலிருந்து 30,000-க்கும் மேற்பட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெஜியாங் மாகாணத்தில் கப்பல், படகுச் சேவைகள் மற்றும் நீர் சார்ந்த அனைத்துச் சுற்றுலா நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.