5,00,000 பேர் பலி; கதறும் மக்கள்... மரண ஓலம்... பிரிட்டன் உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர், பலரும் கணித்ததை விட நீண்டுகொண்டே சென்று 40 மாதங்களைக் கடந்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ஆதரவுடன் உக்ரைன் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வரும் நிலையில், இப்போரினால் ரஷ்யா சந்தித்துள்ள வரலாறு காணாத மனித இழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ உளவுத்துறைத் தரவுகள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனின் முதன்மை உளவு மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்பான 'ஜி.சி.ஹெச்.கியூ' பிரிவின் இயக்குநர் ஆனி கீஸ்ட்-பட்லர் இத்தரவுகளைப் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். போர்க்கள நிலவரங்கள் குறித்துப் பிரிட்டன் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர செய்கிறது. உக்ரைன் மீதான போர் தொடங்கிய நாள் முதல் தற்போதைய 2026-ஆம் ஆண்டின் நடப்புச் சூழல் வரை, கிட்டத்தட்ட 5 லட்சம் ரஷ்ய வீரர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளனர் எனப் பிரிட்டிஷ் உளவுத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாகச் சர்வதேச ஊடகங்கள் ரஷ்யாவின் இழப்பு 3.5 லட்சமாக இருக்கலாம் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள 5 லட்சம் என்ற எண்ணிக்கை அதைவிட மிக அதிகமாக உள்ளது. மூத்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் ரஷ்யாவின் இழப்பை இவ்வளவு துல்லியமாகப் பொதுவெளியில் அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.
ரஷ்ய ராணுவத் தரப்பில் இந்தளவிற்குப் பாதிப்புகள் ஏற்படப் போர்க்கள உத்திகளும், நவீன ஆயுதங்களுமே காரணம் எனப் பிரிட்டன் உளவுத்துறை பகுப்பாய்வு செய்துள்ளது. உக்ரைனின் டான்பாஸ் பகுதியை எவ்வாறாவது கைப்பற்ற வேண்டும் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிடிவாதத்தால், முறையான நவீனப் போர்ப் பயிற்சி இல்லாத இளம் வீரர்கள் மற்றும் சிறைக் கைதிகள் போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டனர். உக்ரைனின் பலமான தற்காப்பு அரண்களை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் பெருமளவில் மடிந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய அதிநவீன ட்ரோன்கள் மற்றும் துல்லியமாக இலக்கைத் தாக்கும் நீண்டதூர ஏவுகணைகள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டு அறைகளையும் ஆயுதக் கிடங்குகளையும் தரைமட்டமாக்கியதே இந்த அதிகப்படியான மரணங்களுக்குக் காரணமாகும்.
இந்த மனித இழப்பு ரஷ்யாவிற்குள் கடுமையான உள்நாட்டு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. வேலை செய்யும் வயதில் இருந்த லட்சக்கணக்கான ஆண்கள் போர்க்களத்தில் மடிந்ததாலும், ராணுவக் கட்டாயப் பணியில் இருந்து தப்பிக்கப் பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாலும் ரஷ்யாவின் விவசாயம், உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் கடுமையான பணியாளர்கள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.
மாஸ்கோ போன்ற பெருநகரங்களில் உள்நாட்டுப் புரட்சி வெடிப்பதைத் தவிர்க்க, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப் பகுதி இளைஞர்களைக் குறிவைத்து ரஷ்ய அரசு ராணுவத்தில் சேர்த்து வருகிறது. இதற்காக சுமார் ₹1.34 கோடி வரையிலான கடன் தள்ளுபடி மற்றும் அதீதச் சம்பளச் சலுகைகளை புதின் அரசு வழங்கி வருகிறது.
இருப்பினும், தார்மீக ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் ரஷ்யா போர்க்களத்தில் பின்வாங்கி வருவதாகவும், போர் நீடிப்பது ரஷ்யாவிற்கு மேலும் பலவீனத்தையே ஏற்படுத்தும் என்றும் பிரிட்டன் உளவுத்துறை எச்சரித்துள்ளது.