நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 8,000-க்கும் மேற்பட்டோர் மீட்பு; 734 பேர் பலி; 2,400 பேர் மாயம்!

 

நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 8,000-க்கும் அதிகமானோர் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத இந்த திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டவர்கள் உள்பட மாயமான சுமார் 2,500 பேரைத் தேடும் பணிகளில் ராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலைகள் மற்றும் நிலப்பரப்புகள் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், ஹெலிகாப்டர்கள் மூலமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் பல இடங்களில் சேறும் சகதியுமாகக் காட்சியளிப்பதாலும், மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் தொடர்ந்து நிலவுகிறது.