கொசு கடித்து  மலேரியா பாதிப்பால்  2 விமான  ஊழியர்கள் பலி!

 

 

ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு திடீரென உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டது. மருத்துவச் சோதனையில் அவர்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதியானது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 6 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அதில் 2 விமான ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அனோபிலஸ் கொசு கடித்ததால்தான் இந்த 6 ஊழியர்களுக்கும் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது என்பது மருத்துவப் பரிசோதனையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும் கடந்த நூற்றாண்டிலேயே ஜெர்மனியில் மலேரியா பாதிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனால் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய விமானம் மூலமாக இந்த ஆபத்தான கொசுக்கள் மீண்டும் ஜெர்மனி வந்திருக்கலாம் எனச் சுகாதாரத்துறையினர் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய ஊழியர்களின் இந்த திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் துறை சார்ந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தப் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.