2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது!

 

தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில், கணவனின் சந்தேகப் புத்தி மற்றும் மாமியார் வீட்டின் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யாதாத்திரி புவனகிரி மாவட்டம் கொள்ளகூடம் கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் மேகல மகேஷ் என்பவருக்கும், ஐஸ்வர்யா (28) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜான்சி (2) மற்றும் பண்டு (10 மாதம்) என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

மகேஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுத் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஐஸ்வர்யா, தனது இரண்டு மாதக் கர்ப்பத்துடன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே வசித்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது கூட, மகேஷ் ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

உறவினர்கள் முன்னிலையில் சமரசம் செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யா கணவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கேயும் அவருக்கு அமைதி கிடைக்கவில்லை. சம்பவத்தன்று இரவு அனைவரும் உறங்கிய பிறகு, ஐஸ்வர்யா தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலையில் அவரது மாமியார் சத்தம்மா இதைப் பார்த்துப் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்தில் ஐஸ்வர்யா எழுதிய இரண்டு கடிதங்கள் சிக்கியுள்ளன. அதில், "என் நடத்தையில் சந்தேகம் இருந்தால், என் மகனின் டி.என்.ஏ-வை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தனது நடத்தையைச் சந்தேகித்த கணவனுக்குக் கடிதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தனது மரணத்திற்குத் தனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனிகளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு கடித்தத்தில் தனது தந்தைக்கு, "அப்பா, மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் உனக்கு மகனாகப் பிறக்கிறேன். பெண்ணாகப் பிறந்து வாழ்வது இந்த உலகில் அசாத்தியமானது. அவர்கள் நீங்கள் கொடுத்த 32 லட்சம் வரதட்சணை மற்றும் 30 சவரன் நகையைத் தான் பார்த்தார்கள், என்னை அல்ல" என்று உருக்கமாக எழுதியுள்ளார். போலீசார் இரண்டு கடிதங்களையும் பறிமுதல் செய்து, வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பப் பிரச்சனைகள் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை எண்ணம் தோன்றினால், சினேகா (044-24640050) அல்லது மாநில அரசின் உதவி எண் 104-ஐத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.