10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.. விருதுநகரில் சோகம்!
விருதுநகர் மாவட்டத்தில் கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலில், 10 வயது மகனுடன் தாய் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (30). இவரது மகன் பிரதீப் (10). இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவரும் உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம், சூலக்கரை ரயில்வே கேட் அருகே பாண்டிச்செல்வி தனது மகனுடன் இருந்துள்ளார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அம்ரித் பாரத் விரைவு ரயில் வந்தபோது, இருவரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசாருக்கு, சம்பவத்திற்கு முன்பு பாண்டிச்செல்வி தனது கணவருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தது தெரிய வந்தது. அதில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் மனஉளைச்சலில் இருப்பதாகவும், மகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறும் அவர் கூறியிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர் கடன் வாங்கிக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.