வரதட்சணை கொடுமையால் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வரதட்சணைக் கொடுமை காரணமாகச் 3 குழந்தைகளுக்குத் தாயான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளையனூர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜயபிரசாத் என்பவரின் மனைவி கார்த்திகா. 3 குழந்தைகளுக்குத் தாயான இவர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கார்த்திகாவை அவரது கணவர் மற்றும் வீட்டார் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தீவிரமாகக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கார்த்திகாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த அவரது உறவினர்கள், முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.