குழந்தைக்கு விஷம் கொடுத்துத் தாய் தற்கொலை முயற்சி - குழந்தை பலி!

 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய் ஒருவர், தனது 8 மாதப் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துத் தானும் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த புனிதா (22) என்பவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குடும்பத் தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான புனிதா, தனது 8 மாதக் பெண் குழந்தையான ரியாவிற்கு விஷம் கொடுத்துக் கொடுத்துள்ளார். குழந்தைக்கு விஷம் கொடுத்த கையோடு, புனிதாவும் விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

வீட்டில் இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்: உடனடியாக இருவரையும் மீட்டுச் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை ரியா, சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தது. விஷம் அருந்திய தாய் புனிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்துக் கொட்டாம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குடும்பத் தகராறின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.