ஒரே ஸ்கூட்டியில் சென்ற மாமியாரும், மருமகளும் 2 கார்களுக்கிடையே சிக்கி உடல்நசுங்கி பலி!

 

ஒரே ஸ்கூட்டியில் சென்ற மாமியாரும், மருமகளும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், இரு கார்களுக்கிடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிவேகமாக வந்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இதில், அந்த 2 கார்களுக்கும் இடையே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் கொண்டனர். கார்களின் மோதல் வேகத்தில், அவற்றுக்கு நடுவே சிக்கிய ஸ்கூட்டர் முற்றிலும் நசுங்கி அப்பளம்போல் நொறுங்கியது. 

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த மருமகள் சாந்தி மற்றும் அவரது மாமியார் வீராயி ஆகிய இருவருக்கும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த கீரனூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான சாந்தி மற்றும் வீராயி ஆகியோரின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய இரண்டு கார்களின் ஓட்டுநர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சென்றவர்கள் மீது கார்கள் மோதி மாமியார், மருமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.