சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்.. .அனல் பறக்கும் விவாதம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

 

கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, இன்று முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை இரண்டாவது கட்ட அமர்வு நடைபெறவுள்ளது.

இன்றைய கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் விவாதத்திற்கு வருகிறது. சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த நோட்டீஸை அளித்துள்ளன. இதனால் இன்று அவையில் கடும் அமளி நிலவ வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்கள், கச்சா எண்ணெய் விவிலை உயர்வு மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

முக்கியமான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்புகள் நடைபெற வாய்ப்புள்ளதால், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டுமே தங்களது எம்.பி.க்களுக்கு 'திரீ லைன் விப்' எனப்படும் கட்டாய உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இதன்படி, மார்ச் 9 முதல் 11 வரை அனைத்து எம்.பி.க்களும் அவையில் நேரில் இருக்க வேண்டும்.

இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரம். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மரபு மீறப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை. மேற்கு வங்கத்தில் 60 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார்.

சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்தத் தீர்மானம் தோல்வியடையவே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இன்றைய கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.