2 வாரத்துக்கு மேல் வாய்ப்புண் இருந்தா செக் பண்ணுங்க ... உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் மருத்துவர்கள் எச்சரிக்கை!
உலகம் முழுவதும் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நச்சுப் பழக்கத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் முதன்மையானது வாய் புற்றுநோய் ஆகும். பொதுவாக 40 வயதைக் கடந்த நபர்களுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டாலும், தற்போதைய சூழலில் இளைஞர்களும் இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வாயின் உட்புறத்தில் உள்ள தட்டையான செல்களில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களால் இந்த நோய் உருவாகத் தொடங்குகிறது. பொதுவாக வாயில் தோன்றி 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் குணமாகாமல் இருக்கும் புண்கள், உதடு அல்லது ஈறுகளில் ஏற்படும் விவரிக்க முடியாத வீக்கம் மற்றும் கட்டிகள் இதன் முக்கிய அறிகுறிகளாகும். மேலும் வாயின் உள்பகுதியில் திடீரெனத் தோன்றும் வெண்மையான அல்லது சிவந்த திட்டுகள், பற்கள் தளர்வடைதல், உணவை விழுங்குவதிலும் பேசுவதிலும் ஏற்படும் கடுமையான சிரமம் ஆகியவைகளும் இதன் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புகையிலையைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட 5 முதல் 10 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதனுடன் மது அருந்தும் பழக்கமும் சேர்ந்தால் அந்த அச்சுறுத்தல் 30 மடங்கு வரை பலமடங்கு உயர்ந்து விடுகிறது. எனவே ஆரம்பக் கட்டத்திலேயே இத்தகைய அறிகுறிகளைக் கண்டறிந்து தகுந்த மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது, இந்த நோயில் இருந்து முழுமையாகக் குணமடையப் பெரும் துணையாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.