எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடலை கேட்டு கண்கலங்கிய நிர்மலா சீதாராமன்! நெகிழ்ச்சி வீடியோ!
பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளையொட்டி பெங்களூருவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.பெங்களூருவில் உள்ள சவுடய்யா நினைவு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப் பேத்திகளான எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ்.சவுந்தர்யா, அவரது இசைப் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் பாடல்களைப் பாடினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அவர்கள் பாடியபோது நிர்மலா சீதாராமன் கண்கலங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பின்னர் உரையாற்றிய அவர், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை மீதான அர்ப்பணிப்பு, பணிவு, ஒழுக்கம் மற்றும் கர்நாடக இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார்.
1926-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தார். 1998-ல் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், 1966-ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய இசைக்கலைஞராகவும் அவர் குறிப்பிடப்படுகிறார்.எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பாரம்பரியம் அவரது கொள்ளுப் பேத்திகளின் வாயிலாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது இந்த நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது.