சம்பளம் இல்லாமலே தொடர்ந்து 6-வது ஆண்டாக  உழைக்கும்  முகேஷ் அம்பானி!  

 

இந்தியாவின் மாபெரும் தொழில் அதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, நடப்பு நிதியாண்டிலும் (2025-26) எவ்வித ஊதியமும் பெறாமல் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகப் பணியாற்றி கார்ப்பரேட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரம்  மளமளவென  சரிவடைந்ததைக் கருத்தில்கொண்டு, தனது முழு சம்பளம், படிகள் மற்றும் கமிஷன் தொகைகளை அவர் முற்றிலும் துறந்தார். அந்த அதிரடி முடிவை இந்த ஆண்டும் அவர் தொடர்ந்து நீடித்துள்ளார் என்று நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை மூலம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.

சம்பளம், அலவன்ஸ், பங்குகள் சார்ந்த சலுகைகள் (Stock Options) என எதையுமே முகேஷ் அம்பானி வாங்கவில்லை என்றாலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மூலமாகக் கிடைக்கும் லாபத்தொகை (Dividend) அவருக்கு முதன்மை வருவாயாகக் கிடைத்து வருகிறது. அதன்படி, ரிலையன்ஸ் குழுமம் இந்த ஆண்டு தங்களது பங்குதாரர்களுக்குப் பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்ட் வழங்கப் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி நேரடியாகத் தன் வசம் வைத்துள்ள 1.61 கோடி பங்குகள் மூலம் மட்டும் சுமார் ரூ.9.66 கோடி டிவிடெண்ட் வருவாய் பெறுகிறார்.

 உலக அளவில் பெரிய நிறுவனங்களின் சிஇஓ-க்கள் (CEO) மற்றும் தலைவர்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை வாரிச் சுருட்டும் இன்றைய அவசரக் காலகட்டத்தில், ஆசியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி தொடர்ந்து 6 ஆண்டுகளாக ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நிறுவனத்தை லாபப் பாதையில் வழிநடத்தி வருவது உலக முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் மாஸ் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது.