தாய் இறந்த துயரத்திலும் சிஎஸ்கேவுக்காக களமிறங்கும் முகேஷ் சவுத்ரி!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி, தனது தாயார் பிரேம் தேவியின் மறைவால் மிகுந்த துயரத்தில் இருந்தபோதிலும், அணியின் நலனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய (ஏப்ரல் 23, 2026) முக்கியமான போட்டியில் களமிறங்கியுள்ளார்.

முகேஷ் சவுத்ரியின் தாயார் பிரேம் தேவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 21 செவ்வாயன்று காலமானார். ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று இறுதிச்சடங்குகளை முடித்த முகேஷ், உடனடியாக மும்பையில் உள்ள அணியினருடன் இணைந்து கொண்டார்.

முகேஷ் சவுத்ரியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், முகேஷுக்கு ஆதரவாகவும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் தங்கள் கைகளில் கருப்பு நிறப் பட்டை  அணிந்து விளையாடுகின்றனர். "இந்த ஆட்டம் முகேஷின் தாயாருக்காக" என சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரேவுக்குத் தொடை தசைப் பகுதியில் (Hamstring) காயம் ஏற்பட்டதால், அவர் இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 30 லட்சம் ரூபாய்க்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டியில் ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக கார்திக் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.

சொந்தத் துயரத்தையும் கடந்து, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த கௌரவப் போரில் முகேஷ் சவுத்ரி காட்டி வரும் அர்ப்பணிப்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.