முல்லைப் பெரியாறு போராட்டக் களத் தலைவர் கே.எம். அப்பாஸ் மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட போராட்டக் களத் தலைவர் கம்பம் கே.எம். அப்பாஸ் அவர்களின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உழவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் களப்பணியையும் கருத்தியல் தெளிவையும் இணைத்துச் செயல்பட்டவர் கே.எம். அப்பாஸ் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

கம்பம் கே.எம். அப்பாஸின் மறை செய்தி மிகுந்த துயரமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் களமாடிய தோழர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.எம். அப்பாஸின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.