மேம்பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார்; 3 இளைஞர்கள் பலி!
மும்பை: மராட்டிய மாநிலம் மும்பையில் அதிகாலை நேரத்தில் நடந்த பயங்கர கார் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த BMW சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மும்பை Marine Drive பகுதியில் இருந்து Haji Ali நோக்கி இன்று அதிகாலை BMW கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் அதிகாலை 5.20 மணியளவில் Mumbai Coastal Road பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, தடுப்பை உடைத்துக்கொண்டு பாலத்தில் இருந்து கீழே உள்ள கட்டுமானப் பகுதிக்குள் விழுந்தது. விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரில் இருந்த 4 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு நபர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஷனாயா கஜ்ஜல் (21), திரியா சேத் (17) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது உயிரிழந்த நபரின் அடையாளம் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் இருந்த அனைவரும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மும்பையில் கல்வி பயின்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி, அதிக வேகம் மற்றும் திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்துக்கான முழுமையான காரணம் போலீஸ் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.இதற்கிடையே, BMW கார் மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே விழும் காட்சிகள் அப்பகுதியில் இருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.