மும்பை கணபதி பந்தலில் பயங்கரம்... மின்சாரம் தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலி; 4 பேர் காயம்!

 

மும்பை லால்பாக் பகுதியில் கணபதி விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த பந்தல் அருகே ஏற்பட்ட மின்கசிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 8 வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மும்பையின் காலாசவுக்கி பகுதியில் உள்ள கணபதி விழா பந்தலுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டிருந்தனர். அதிகாலை சுமார் 2.20 மணியளவில், பந்தலின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிநீர் மற்றும் குளிர்பான கடை பகுதியில் மின்கசிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்கசிவு காரணமாக அந்தப் பகுதியில் மின்சாரம் பாய்ந்ததில் அங்கு இருந்த 6 பேர் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து போலீசாரும் மின் நிறுவன அதிகாரிகளும் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கிய 6 பேரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 8 வயது ராகினி கான்ஷ்யாம் யாதவ் என்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.மேலும், 33 வயது சுஜாதா என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மின்கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, கிரண் அக்பர் நாயக், தன்வி நரேஷ் ஹண்டே, சாஹில் சந்தீப் தாரே ஆகிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயது ரூஹி சிங் என்ற சிறுமி பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தைத் தொடர்ந்து BEST மின்சார நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கணபதி விழா அலங்காரம் மற்றும் தற்காலிக கடைக்காக மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள தற்காலிக மின் மீட்டர், வயரிங் மற்றும் MCB தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த மின்கசிவுக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து காலாசவுக்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழா நடைபெறும் பகுதியில் தற்காலிக மின் இணைப்புகள் மற்றும் மின்சார பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.கணபதி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.