"அடுத்த சீசனில் வலிமையுடன் மீண்டு வருவோம்" - மும்பை இந்தியன்ஸ் திலக் வர்மா!

 

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து, வரலாற்றிலேயே மிக மோசமான முறையில் முதல் அணியாகத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அணியின் தோல்விகள் குறித்தும், ரசிகர்களின் ஏமாற்றம் குறித்தும் மும்பை அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா மிகவும் உருக்கமாகவும் நம்பிக்கையுடனும் பேசியுள்ளார்.

நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட போதிலும், எஞ்சிய போட்டிகளைத் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை எனத் திலக் வர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.

"இந்த சீசனில் எங்களால் நினைத்த இலக்கை எட்ட முடியாமல் போனது உண்மைதான். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்று ஒரு தனித்துவமான பாரம்பரியமும், பெருமையும் இருக்கிறது. அதனை நிலைநாட்டும் வகையில், எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் ஒட்டுமொத்தத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு இன்னும் பலமாக வருவோம் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அவர் அளித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த அணியுடன் பயணிப்பதிலும், இந்த நீல நிற உடைகளை அணிவதிலும் நான் எப்போதுமே பெருமிதம் கொள்கிறேன். இந்த ஆண்டு ஏமாற்றமாக அமைந்தாலும், தவறுகளைத் திருத்திக்கொண்டு, அடுத்த சீசனில் புதிய உத்வேகத்துடன், மிகவும் வலிமையான அணியாக நாங்கள் நிச்சயம் மீண்டு வருவோம்.

மும்பை அணியின் மூத்த வீரர்கள் பலரும் ஃபார்ம் அவுட்டாகி தவித்த நிலையில், இந்த சீசனில் திலக் வர்மா மட்டுமே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த உருக்கமானப் பேச்சு, சோகத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.