“உன் வீட்டில் அம்மா, தங்கை இல்லையா?” ...  தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

 

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ரயிலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரைத் தட்டிக்கேட்ட இளம்பெண், ஓடும் ரயிலில் சிக்கி தனது இடது கையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 53 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

allowfullscreen

நைகான் ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்

கடந்த நவம்பர் 4-ம் தேதி போரிவலியில் இருந்து நைகான் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அதே ரயிலில் இருந்த ஜிதேந்திர கிரிஜப்பா ஹிர்முகே (53) என்பவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

நைகான் ரயில் நிலையத்தில் இறங்கிய பெண், அவரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, “உன் வீட்டில் அம்மா, தங்கை இல்லையா?” என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ரயில் சக்கரத்தில் சிக்கிய கை

வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த நபர், அந்தப் பெண்ணைத் தாக்கி தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் ரயில் பெட்டிகளுக்கு இடையே தண்டவாளத்தில் விழுந்தார். மீண்டும் நடைமேடைக்கு ஏற முயன்றபோது ரயில் புறப்பட்டதால், அவரது இடது கை சக்கரத்தில் சிக்கி துண்டானது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவான ஜிதேந்திராவை நவம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.