பகீர்... நள்ளிரவில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்... மூவர் பரிதாப பலி!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பிவாண்டி பகுதியில் உள்ள பாலாஜி நகர்-கங்காராம்வாடி பகுதியில் பழமையான 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இயங்கி வந்தது. 'கோஹினூர் அபார்ட்மெண்ட்' என்று அழைக்கப்படும் இந்தக் கட்டிடம் நேற்றிரவு 11:30 மணியளவில் திடீரென சீட்டுக்கட்டு போல மொத்தமாகச் சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் கூச்சல் குழப்பமும் பரபரப்பும் நிலவியது.
கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைவாகச் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். எனினும் கட்டிடத்திற்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருந்ததால் மீட்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளை அகற்றும் மீட்புப் பணிகளில் தற்காலிகமாகத் தொய்வு ஏற்பட்டுப் பணிகள் தாமதமாகின.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இன்னும் 5 முதல் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.