குடியிருப்புக்குள் புகுந்து பலாப்பழம் சாப்பிடும்  ‘சக்க கொம்பன்’ யானை... வைரல் வீடியோ!

 

 

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் குடியிருப்புப் பகுதிக்குள் 'சக்க கொம்பன்' என்ற காட்டு யானை புகுந்து பலாப்பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 18-ம் தேதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சக்க கொம்பன்' காட்டு யானை மீண்டும் உலவத் தொடங்கியது. குடியிருப்பு மற்றும் சாலையோரப் பகுதிகளில் யானையின் நடமாட்டத்தைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த யானை குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதிகளுக்குள் நுழையும்போது அங்குள்ள பலா மரங்களைத் தேடிப் பிடித்து, பழங்களைப் பறித்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மலையாளத்தில் பலாப்பழத்தை 'சக்க' என்றும், தந்தம் கொண்ட ஆண் யானையை 'கொம்பன்' என்றும் அழைப்பதால், உள்ளூர் மக்கள் இந்த யானைக்கு 'சக்க கொம்பன்' எனப் பெயரிட்டுள்ளனர்.

பலா மரத்திலிருந்து பழங்களைப் பறித்துச் சாப்பிடும் யானையின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பலாப்பழங்களின் வாசனையால் ஈர்க்கப்பட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், வீடுகளுக்கு அருகிலுள்ள மரங்களில் பழுக்கும் பலாப்பழங்களை முன்கூட்டியே பறித்துச் சேகரிக்கும் திட்டத்தை கேரள வனத்துறை கடந்த 16-ம் தேதி அறிவித்திருந்தது. இருப்பினும், சக்க கொம்பன் மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்துள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்