ஆந்திராவில் கரையைக் கடக்கும் 'முரசு'... “நவ.15 வரை தமிழ்நாட்டிற்கு புதிய புயல் ஆபத்து இல்லை" - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய 'முரசு' புயல் தீவிரப் புயலாக மாறியுள்ள நிலையில், வரும் நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகத்திற்குப் புதிய புயல் ஏதும் வர வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவில் நெல்லூர் – நரசாப்பூர் இடையே, ஒங்கோல் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 75 கி.மீ வேகம் வரையிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
புயல் நேரடியாகக் கரையைத் தொடும் திருப்பதி, நெல்லூர், சித்தூர், பாபட்லா, பிரகாசம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்திற்குப் புதிய புயல்கள் எதுவும் வர வாய்ப்பில்லை என்றாலும், நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் உருவாகும் புயல்கள் சென்னை அருகே கரையைத் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குப் பிறகு தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.