முரசு புயல் கரையைக் கடந்தது ... தமிழகத்தின் 4 பகுதிகளில் காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை!

 

 

ஆந்திராவில் முரசு புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்த நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கக்கடலில் உருவான தீவிர புயலான முரசு, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குக் கடற்கரையில் நெல்லூர் – நரசாபூர் இடையே, ஓங்கோல் அருகே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது; காற்றின் வேகம் 120 கி.மீ. வரை அதிகரித்தது.புயல் கரையைக் கடந்தாலும் அதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.