கள்ளக்காதலன் வெட்டிப் படுகொலை... குப்பைக் கிடங்கில் வீசிய கணவன்!
திண்டுக்கல் அருகே திருமணத்தை மீறிய உறவு காரணமாக, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தாளக்கடை பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (24). இவருக்கு நாகலட்சுமி (22) என்ற மனைவியுள்ளார். இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும், நாகலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கணவர் வீரமணிக்குத் தெரியவந்ததை அடுத்து, தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தனது எச்சரிக்கையையும் மீறி மனைவி நாகலட்சுமி, அரவிந்தனுடன் தொடர்ந்து பழகி வந்ததால் வீரமணி ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளார். அரவிந்தனைத் தீர்த்துக் கட்டவும் அவர் சமயம் பார்த்துக் காத்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 14ம் தேதி அதிகாலை, திட்டமிட்டபடி அரவிந்தனை வழிமறித்த வீரமணி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அரவிந்தனைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயமடைந்த அரவிந்தன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பின்னர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, அரவிந்தனின் உடலைத் தூக்கிச் சென்ற வீரமணி, தாளக்கடை பிரிவு அருகே உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் வீசி, யாருக்கும் தெரியாதவாறு மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதற்கிடையில் அரவிந்தன் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் நத்தம் மற்றும் திண்டுக்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் வீரமணியைத் தேடி வந்த தனிப்படை போலீசார், அவரைக் கைது செய்துள்ளனர். கொலைக்குத் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.