காதலனுக்காக வருங்கால கணவன் கொலை... வழக்கில் திடீர் திருப்பம்... 4 நாட்களுக்கு முன்பே கொலைமுயற்சி நடந்தது அம்பலம்!
மகாராட்டிர மாநிலம் புனேயில் 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் விஷால் அகர்வால், லோகாட் கோட்டையிலிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்பொழுது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருங்கால கணவரைக் கொலை செய்ய, அவரது வருங்கால மனைவி சியா கோயல் 4 நாட்களுக்கு முன்பே (ஜூன் 14 அன்று) இதே கோட்டையில் ஒருமுறை கொலை முயற்சி செய்து, அது தோல்வியடைந்தது காவல் துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜூன் 14 அன்று சியா, கேதனை முதன்முறையாக லோகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கோட்டையின் விளிம்பில் நின்றபோது அவரைப் பள்ளத்தில் தள்ளியுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு மரத்தில் கேதன் சிக்கியதால் உயிர் தப்பியுள்ளார். அப்போது சியா சாமர்த்தியமாக, "அங்கு ஒரு பாம்பு இருந்ததாகவும், உங்களைப் பாம்பு கடிக்காமல் காப்பாற்றவே அவசரத்தில் தள்ளினேன்" என்றும் கூறி கேதனை நம்ப வைத்துள்ளார்.
இந்தத் தோல்விக்குப் பிறகு, ஜூன் 18 அன்று தனது பிறந்தநாள் கொண்டாட்டப் பயணம் எனக் கூறி கேதனை மீண்டும் லோகாட் கோட்டைக்கு வருமாறு சியாவும் அவளது தாயாரும் வற்புறுத்தியுள்ளனர். அனுபவமிக்க மலையேற்ற வீரரான கேதன் முதலில் மறுத்தாலும், பின்னர் சம்மதித்துள்ளார். ஜூன் 18 அன்று திட்டமிட்டபடி காதலன் சேவனுடன் சேர்ந்து கேதனைப் பள்ளத்தில் தள்ளி இருவரும் கொன்றுள்ளனர்.
ஆரம்பத்தில் இதனை ஒரு சாதாரண விபத்து மரணம் எனச் சியா நாடகமாடிய போதிலும், காவல் துறையின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையில் சதித்திட்டம் அம்பலமானது. சியா மற்றும் காதலன் சேதன் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் மட்டும் 2,004 முறை தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன. இவர்கள் மொத்தமாக 238 மணி நேரம் பேசியதை போலீசார் கண்டறிந்தனர்.
ஜூன் 18 கொலை நடந்த அன்று, தன் இருப்பிடத்தைக் காவல் துறை கண்டறிவதைத் தவிர்க்க, சேதன் தனது செல்போனைத் தனது கடையிலேயே ஊழியர்களிடம் விட்டுவிட்டு, ஊழியரின் செல்போனை எடுத்துக் கொண்டு லோகாட் சென்றுள்ளார். ஆனால், தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் அவரது நடமாட்டத்தைப் போலீசார் துல்லியமாக உறுதி செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் கேதன் - சியா ஜோடிக்கு முறைப்படி நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் நவம்பர் 25 அன்று திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருந்தது. திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனை முன்பதிவு செய்யப்பட்டு, விருந்தினர்களை அழைத்துச் செல்ல இரண்டு தனி விமானங்களுக்கும் ற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மகன் விபத்தில் இறந்ததாக நினைத்துக் கதறிய குடும்பத்தினர், இறுதிச் சடங்கிற்குப் பின் சியா வீட்டிற்கு வந்தபோது அவளது முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்தனர். தற்போது லோனாவாலா ஊரக காவல் துறையினர் சியா கோயல் மற்றும் சேதன் சவுத்ரியைக் கொலை வழக்கில் கைது செய்து, அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத் தர மேலதிக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.