ஈரோட்டில் பைனான்சியர் ஓட ஓட விரட்டிக் கொலை.. போலீசார் விசாரணை!

 

ஈரோட்டில் பிரபல பைனான்சியர் உதயகுமார் என்பவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பணம் கொடுக்கல் வாங்கல் அல்லது முன்விரோதம் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஈரோடு சூரம்பட்டி ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் உதயகுமார்.  சின்னமுத்து இரண்டாவது வீதியில் அலுவலகம் அமைத்து பைனான்ஸ்  தொழில் நடத்தி வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதல் அலுவலகம் வராமல் இருந்த உதயகுமார், மாலையில் தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த இருவர், உதயகுமாரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஈரோடு நகரக் காவல்துறையினர், உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்த முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளை அடையாளம் காணச் சின்னமுத்து இரண்டாவது வீதி, சூரம்பட்டி நான்கு சாலை மற்றும் அரசு மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். உதயகுமார் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததால், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட முன்விரோதமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

உதயகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாலையில் நடந்த இந்தத் துணிச்சலான கொலைச் சம்பவம் ஈரோடு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.