கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை! கணவனின் நண்பனுடன் சேர்ந்து மனைவி வெறித்தனம்!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (32), பெங்களூருவில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மோனிஷா (26) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி பெங்களூருவில் வேலை பார்த்தபோது, அங்கு அவருக்கு அன்பழகன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தனது நண்பர் என்ற முறையில் அன்பழகனைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து மனைவி மோனிஷாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.
நாளடைவில் மோனிஷாவுக்கும் அன்பழகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கிருஷ்ணமூர்த்தி வேலைக்குச் சென்ற நேரங்களில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இவர்களின் விவகாரம் கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியவரவே, அவர் தனது மனைவியையும் நண்பனையும் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷாவும் அன்பழகனும், கிருஷ்ணமூர்த்தியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு மோனிஷா இரவு உணவில் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். மயக்கமடைந்த கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மோனிஷா உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கிருஷ்ணமூர்த்தியின் உடலில் நச்சுத்தன்மை கொண்ட மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோனிஷாவிடம் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
"எனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காதலன் அன்பழகனுடன் சேர்ந்து தூக்க மாத்திரை கொடுத்துக் கொன்றேன்," என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து மோனிஷா மற்றும் அவரது காதலன் அன்பழகன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நண்பனை நம்பி வீட்டிற்கு அழைத்து வந்த கணவரையே மனைவியும் நண்பனும் சேர்ந்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.