மீண்டும் ஒரு ஆணவக் கொலை... இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை... பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஒரு வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொடூரக் கொலை குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் பக்கத்து ஊரைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய் என்பது தெரியவந்தது. இவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்ததாகவும், இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் நேற்றிரவு சஞ்சய்யை வழிமறித்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்பதை உறுதி செய்த போலீசார், பெண்ணின் தந்தையான குமார் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை தற்பொழுது கைது செய்துள்ளனர். பிடிபட்ட 3 பேரிடமும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து போலீசார் தற்பொழுது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டியில் அரங்கேறிய இந்த ஆணவக் கொலை சம்பவம் இணையதள பக்கங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.