13 வயது சிறுவன் அடித்தேக் கொலை... நண்பர்களான சிறுவர்கள் 2 பேர் கைது!
கோயம்புத்தூர் இருகூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனான ரித்தீஸ் 15-ம் தேதி முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்பொழுது அவர் கற்கள் மற்றும் மதுபாட்டில்களால் மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் மரணம் குறித்துப் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையில், சம்பவத்தன்று ரித்தீஸ் தனது நண்பர்களுடன் வழக்கம் போல் விளையாடச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாகப் பெரிய அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவனது நண்பர்கள் அருகில் கிடந்த கற்கள் மற்றும் உடைந்த மதுபாட்டில்களைக் கொண்டு ரித்தீஸை ஓட ஓட விரட்டித் தாக்கியதில் அவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது ரித்தீஸின் நெருங்கிய நண்பர்களான 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தான் என்பதைப் போலீசார் தற்பொழுது கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் சடலத்தைப் போலீசார் முறைப்படி கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோவையில் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் நண்பனைச் சிறுவர்களே கொலை செய்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.