வீச்சரிவாள், கத்தி, துப்பாக்கியுடன்  பிறந்தநாள் கொண்டாடிய  பிரபல ரவுடி... தட்டித் தூக்கிய போலீசார்!  

 

 

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜானி என்ற 45 வயது பிரபல ரவுடி மீது 6 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், கடத்தல் மற்றும் 20 வழிப்பறி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த காலங்களில் சிறையில் இருந்தவாறே தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த புகார்களும் இவர் மீது உள்ளன. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ள இவர், தன் மீதான வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

இந்நிலையில் ஜானி தனது பிறந்தநாளை வேலூர் மக்கான், காட்பாடி, சத்துவாச்சாரி, ஓல்டு டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். வண்டறந்தாங்கல் வீதியில் வீச்சரிவாள், கத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கேக் வெட்டி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்த இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி காட்பாடி மற்றும் வேலூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு ஜானியின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான ரவுடி ஜானியை நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.