பெற்ற தாயே 3 வயதுப் பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரம்... !  

 

கோவை மாவட்டம் ஆனைமலை தம்மம்பதி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் வயது 32, கடந்த 2017ஆம் ஆண்டு சேத்துமடையைச் சேர்ந்த சரோஜினி வயது 27 என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், சரோஜினிக்கு ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாகத் தம்பதி இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 12-08-2021 அன்று மணிகண்டனின் பெற்றோர் சமாதானம் பேசி மருமகளையும், பேத்தியையும் வீட்டிற்கு அழைத்து வந்த போதிலும், தங்களது கள்ளக்காதலைத் தொடர்வதற்குக் குழந்தை இடையூறாக இருப்பதாகச் சரோஜினி கருதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 14-08-2021 அன்று கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பச்சிளம் பெண் குழந்தையைச் சரோஜினி வீட்டுக்குள் தூக்கிச் சென்று மிகக் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் ஏதும் தெரியாதது போல் குழந்தை மயங்கி விழுந்துவிட்டதாக நாடகமாடி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவில் அது கொலை என்பது உறுதியானது. இந்த கொடூரச் செயல் குறித்து ஆனைமலை போலிசார் தீவிர விசாரணை நடத்திப் பெற்ற தாயான சரோஜினியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான கொலை வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் பிரபு முன்னிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, பெற்ற மகளையே கள்ளக்காதலுக்காகக் கொடூரமாகக் கொலை செய்த தாய் சரோஜினிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் அதிரடித் தீர்ப்பளித்தார்.