காதலனுடன் சேர்ந்து  பெற்றோர் மற்றும் தங்கையைக்  கொலை செய்துவிட்டுத் தப்பிய மூத்த மகள் புதுவையில் கைது!  

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சீகேஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சோமசுந்தர் வயது 52, அவரது மனைவி முத்துலட்சுமி வயது 48 மற்றும் இளைய மகள் சுப்ரியா வயது 20 ஆகியோர் தங்களது வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்த  கொடூரக் கொலை குறித்து உள்ளூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தத் தம்பதியரின் மூத்த மகளான ஸ்வேதா வயது 25 என்பவள், தனது காதலன் கென்னத் என்பவனுடன் சேர்ந்து இந்த கொடூரச் செயலை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய தகவல்கள் வெளியாகின.  

வேறு மதத்தைச் சேர்ந்த கென்னத் என்பவரை ஸ்வேதா காதலித்ததற்குப் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளது. இதற்கிடையே தனது   ஆடம்பர வாழ்க்கைக்காகப் பெற்றோரின் பெயரில் இருந்த கடன் அட்டைகளைப் பயன்படுத்தி 30 லட்சம் ரூபாய் வரை ஸ்வேதா ரகசியமாகக் கடன் வாங்கியுள்ளார். இந்தத் தொகையைக் கேட்டுச் சோமசுந்தரின் வீட்டிற்கு வங்கி நோட்டீஸ் வந்ததால், பெற்றோர்கள் மூத்த மகளிடம் இதுகுறித்து  கேள்விகளை எழுப்பிக் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்வேதா, தங்களது கடனை அடைக்கச் சொத்தில் பங்கு கேட்டபோது பெற்றோர் மறுத்ததால், காதலனுடன் சேர்ந்து அனைவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். பெற்றோர் மற்றும் தங்கையைக் கொன்றுவிட்டால் ஒட்டுமொத்தச் சொத்தும் தனக்கே கிடைத்துவிடும் என்ற கொடூர எண்ணத்தில் இந்தச் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், ஸ்வேதா தற்பொழுது புதுவையில் வைத்து போலீசாரால்   கைது செய்யப்பட்டுள்ளார்.