கொடூரம்... தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் ஒன்பது பேர் மர்மமான முறையிலும் பழிக்குப்பழியாகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை வேளச்சேரியில் சுரேஷ் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் வாகனத்திற்குள் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தாக் என்ற உணவகத் தொழிலாளி, நள்ளிரவில் அவரது அறைக்குள் புகுந்த மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கட்டிடத் தொழிலாளி சரவணகுமார் என்பவர் சிமெண்ட் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கண்ணம்பிவிளையில் மேலும் இருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மணிகண்டன் என்ற வாலிபரும், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பழிக்குப்பழியாகச் சித்திக் என்ற இளைஞரும் பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டுச் சம்பவ இடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நிலத் தகராறு காரணமாகத் துலுக்கானம் என்ற விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து அரங்கேறிய இந்த ஒன்பது கொலைச் சம்பவங்கள் குறித்துத் தனித்தனிப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்திப் பலரைக் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நாளில் நிகழ்ந்த இந்தத் தொடர் படுகொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.