தேனிலவில் புதுமணப் பெண்ணை மாடியிலிருந்து தள்ளி கொலை முயற்சி... கொடூரத்தின் உச்சம்!
உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டார் 122 பகுதியைச் சேர்ந்தவர் சுசரிதா சாஹா. 27 வயதான இவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ஹர்விந்தர் சௌஹான் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் நொய்டாவில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே தங்கியிருந்த ஹர்விந்தர் சௌஹான், தனது மனைவி சுசரிதா சாஹாவைத் தேவையில்லாத காரணங்களுக்காகத் தினமும் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில் இந்த புதுமணத் தம்பதியர் கடந்த மே 4 ஆம் தேதி தேனிலவுக்காகச் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அங்கு மே 9 ஆம் தேதி தங்கியிருந்த விடுதியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை மாடிப் படிக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுசரிதா சாஹாவை, இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகக் கணவர் மிரட்டியுள்ளார்.
தேனிலவு முடிந்து வீடு திரும்பியதும் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகச் சுசரிதா சாஹா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் அவரது முகத்தில் குத்தி, வயிற்றில் உதைத்துக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டுத் டெல்லிக்குத் தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த சுசரிதா சாஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நொய்டா செக்டார் 113 காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.