துணி துவைப்பதில் மாமியார் - மருமகள் சண்டை ... பெற்ற தாயை தென்னை மட்டையால் அடித்துக் கொன்ற அரசு அதிகாரி !
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள சாத்தப்பாடி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி 65 வயது சிவகாமி ஆவார். இவர்களது மகன் 40 வயது பூமாலை, நெடுஞ்சாலைத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருவதுடன், தனது மனைவி 38 வயது தமிழரசியுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 21 ஆம் தேதி மாலை நேரம், சிவகாமிக்கும் அவரது மருமகள் தமிழரசிக்கும் இடையே வீட்டிற்கு அருகில் துணி துவைக்கும் கடப்பா கல் போடுவது தொடர்பாகக் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டு, இருவரும் மாறி மாறித் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டுள்ளனர்.
அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பூமாலை சண்டையைச் சமரசம் செய்ய முயன்றும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்து அருகில் கிடந்த தென்னை மட்டையை எடுத்துத் தனது தாய் சிவகாமியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த சிவகாமி ரத்த வெள்ளத்தில் சரிந்ததை அடுத்து, அவரது மகள் கலைச்செல்வி விரைந்து வந்து அவரை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து கடந்த 26 ஆம் தேதி கெங்கவல்லி காவல் நிலையத்தில் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், பூமாலை மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சிவகாமி பரிதாபமாக உயிரிழந்ததால், இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி பூமாலையைக் கைது செய்தனர். பின்னர் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பெற்ற தாயையே மகன் அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.