குளிப்பதை வீடியோ எடுத்ததாகக் கூறி பெண்ணுக்கு மிரட்டல்... இளைஞரை கொலை செய்த தம்பதி பரபரப்பு வாக்குமூலம்!
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவரான ஹர்திக் என்பவர், தனது வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் வசித்து வரும் ஒரு எலக்ட்ரீசியனின் மனைவி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்தப் பெண்ணிடம் தனது செல்போனில் நிர்வாண வீடியோ இருப்பதாகக் கூறி, தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அதனைச் சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்தப் பெண் மிரட்டலுக்குப் பணிந்த போதிலும், அவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அந்தப் பெண் நடந்த விபரங்கள் அனைத்தையும் தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், முதலில் வாலிபரின் பெற்றோரிடம் கூற நினைத்தாலும், குடும்ப மானம் போய்விடும் என்று பயந்து வாலிபரைக் கொலை செய்யத் தம்பதியினர் திட்டம் தீட்டினர். கடந்த 11 ஆம் தேதி தம்பதியின் 3 குழந்தைகளும் பள்ளிக்குச் சென்ற பின்னர், திட்டமிட்டபடி கணவர் வெளியே செல்வது போல் கிளம்பிச் செல்ல, வாலிபர் ஹர்திக் ஆசை வார்த்தைகளுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் திடீரெனத் திரும்பி வந்த பெண்ணின் கணவர், வாலிபரின் கழுத்தை வயரால் இறுக்க, அவரது மனைவி வாலிபரின் கைகளைப் பிடித்துக் கொள்ளவே அவர் மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் வாலிபரின் உடலைப் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டிற்குள் வைத்துவிட்டுத் தப்பியோடிய தம்பதியை, அவரது தந்தையின் புகாரின் பேரில் போலீசார் சி.சி.டி.வி. ஆதாரங்களின் உதவியோடு கைது செய்துள்ளனர். விசாரணையில் பதிவு செய்ததாகக் கூறப்படும் அந்த வீடியோவை அவர்கள் பார்க்கவே இல்லை என்பதும், கொலையின் போது அவரது செல்போனை உடைத்துச் சாலையோரம் வீசியதும் தெரியவந்துள்ளது.