அக்காள் கணவர் மீது மோகம்... வருங்காலக் கணவரை கொடூரமாகக் கொன்ற இளம்பெண்!
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டம் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான நீரஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஊர்மிளாவுக்கும் அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது. தனக்குத் திருமணம் நடந்துவிட்டால் அக்காள் கணவருடன் பழக முடியாது என எண்ணிய ஊர்மிளா அதிர்ச்சி முடிவெடுத்தார்.
வருங்காலக் கணவரைக் கொன்றுவிட்டால் தங்களது இரகசிய உறவு தொடரும் என இருவருமாகச் சேர்ந்து திட்டம் தீட்டினர். அதன்படி நீரஜை பீகார் எல்லையில் உள்ள பேலா வனப்பகுதிக்குத் தனியாக வருமாறு ஊர்மிளா ஆசையாக அழைத்துள்ளார். இதனை உண்மை என நம்பி வனப்பகுதிக்குச் சென்ற நீரஜை அங்கு மறைந்திருந்த சுபாஷ் பஸ்வானும் ஊர்மிளாவும் தாக்கினர். இருவரும் சேர்ந்து நீரஜைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அலைபேசிச் சிக்னல்களை ஆய்வு செய்தபோது நீரஜின் கடைசி இருப்பிடம் காடு எனத் தெரிந்தது. மேலும் அந்தச் சம்பவ இடத்தில் ஊர்மிளாவின் அலைபேசியும் இருந்தது உறுதியானதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டதை அடுத்துக் கொலையாளிகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.