வெப்சிரீஸ் பார்த்து கொலை செய்த வழக்கு... கைதான தாய், மகன் திடுக்கிடும் வாக்குமூலம்!
தெலுங்கானாவின் சித்திப்பேட்டை நகரில் ராமக்காபேட்டை பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 8-ந்தேதி அடையாளம் தெரியாத வகையில் பகுதியளவு எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தீவிர விசாரணையில் அவர் பூம்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த அதிகம் விஜயா என்ற 45 வயது நபர் என்பது தெரியவந்தது. இது குறித்துச் சித்திப்பேட்டை காவல் ஆணையாளர் ராஷ்மி பெருமாள் செய்தியாளர்களிடம் கூறுகையில் பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்காளி ரஜிதா மற்றும் அவருடைய மைனர் மகன் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்றார்.
அவர்கள் இருவரும் பெண்களை நோட்டமிடுவதுடன் அவர்களிடம் உள்ள பணம் நகை மற்றும் சொத்துகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி விடுவதை வாடிக்கையாகக் கொண்டு இந்தத் குற்றங்களை அரங்கேற்றி வந்துள்ளனர். விஜயா விஷயத்தில் ரஜிதா மற்றும் அவருடைய மகன் இருவரும் தங்களுடைய மளிகைக் கடையில் வைத்துப் பேசி கொண்டிருந்தபோது விஜயாவைத் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை மொபட்டில் எடுத்துச் சென்று எரித்துள்ளனர் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோன்று அச்சமயப்பள்ளி வனப் பகுதியில் கடந்த மே 28-ந்தேதி எரிந்த நிலையில் கிடந்த குந்தா ரேகா என்ற பெண்ணின் கொலைச் சம்பவத்திலும் இந்த இருவருக்கும் தொடர்பு உள்ளது எனப் போலீசார் தெரிவித்தனர். இதுவரை இவர்களிடம் இருந்து 5 தோலா தங்கத்திலான தாலி சங்கிலி, 53 தோலா வெள்ளி, 1,03,000 ரூபாய் பணம் மற்றும் மொபட் ஒன்று என 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரக்கூடிய வலைத்தொடர்களைப் பார்த்து பல்வேறு திட்டங்களைத் தீட்டி வந்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.