வீட்டுக்கு முன் ஏன் கூச்சல் போடறீங்க... தட்டிக் கேட்டதால் இசைக்கலைஞர் அடித்தே படுகொலை... பகீர் சிசிடிவி காட்சிகள் !
தெற்கு டெல்லியின் கிலோகாரி கிராமத்தில் தனது வீட்டின் முன்பு கூச்சலிட்ட கும்பலைத் தட்டிக் கேட்ட மணிப்பூரைச் சேர்ந்த இசைக்கலைஞர் சி.விக்ரம் சிங் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் தனது மகனால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் திடீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது. மெய்தி சமூகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் உயிரிழந்த இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.