கொலை மிரட்டல் வழக்கு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு!

 

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜா என்பவரைப் போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர் சார்பு ஆய்வாளரைக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றார். இதனால் தற்காப்புக்காகப் போலீசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

 

வத்தலகுண்டு பகுதியில் கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜா என்பவரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் அவரை இன்று போலீசார் கைது செய்யச் சென்றபோது, திடீரென ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியால் தனிப்படை சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத் என்பவரைக் கடுமையாக வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றார்.

 

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தித் தப்பிக்க முயன்ற குற்றவாளியைக் கட்டுப்படுத்தவும், தற்காப்புக்காகவும் போலீசார் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குற்றவாளி ராஜா மேல் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், குற்றவாளியின் தாக்குதலில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்தும் அதே மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.