பெரும் சோகம்... நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலனின்றி இன்று காலை திடீர் மரணம்!
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். தலையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாகக் கடந்த 17 நாட்களாக அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் மூச்சு விட முடியாமல் தவித்து வந்தார்.
முன்னதாகத் தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றக் கோரி நடிகர் முத்துக்காளை சமூக வலைதளத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்த தமிழக முதலமைச்சர் விஜய், மாலதிக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க உடனடியாக உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அமைச்சர் ராஜ்மோகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று உரிய மருத்துவ வசதிகளைச் செய்யக் கேட்டுக்கொண்டார். எனினும், தீவிரக் கண்காணிப்பில் இருந்த மாலதி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
47 வயதான மாலதியின் இந்தத் திடீர் மறைவு நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஈடுசெய்ய முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உயிர் பிரிந்தது ஒட்டுமொத்தத் திரைத்துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.