“என் இனிய தமிழ் மக்களே...” - மெளனமானது பாரதிராஜாவின் குரல் - முடிவுக்கு வந்தது ஒரு சரித்திர சகாப்தம்!

 

"என் இனிய தமிழ் மக்களே, நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்..." - உலகெங்கும் வாழும் தமிழர்களின் காதுகளில் தேனாகப் பாய்ந்து, நெஞ்சை உலுக்கும் இந்த காந்தக் குரல் இன்றுடன் என்றென்றைக்குமாக மவுனமாகிவிட்டது. தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா (84) மறைந்தாலும், தமிழ் சினிமா வரலாறு உள்ளவரை அவரது பெயர் அழியாத நல்முத்திரையாக நிலைத்திருக்கும்.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பெரியமாயத்தேவர் - கருத்தம்மா தம்பதியருக்கு 1941 ஜூலை 17 அன்று மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட இயற்பெயர் 'சின்னசாமி'. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியம், பேச்சுப்போட்டி மற்றும் மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டிய இவர், பின்னர் தனது சொந்த ஊரிலேயே சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றினார். ஆனால், கலைத்தாயின் ஈர்ப்பு இவரைச் சென்னை கோடம்பாக்கத்திற்கு இழுத்து வந்தது.

சென்னையில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜாவின் ஆரம்பக்காலம் போராட்டங்களால் நிரம்பியது. வாழ்வாதாரத்திற்காக மேடை நாடகங்கள், பெட்ரோல் பங்க்குகளில் தினக்கூலி வேலை எனப் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டே சினிமா வாய்ப்புக்காகத் தெருத் தெருவாக அலைந்தார். இவரின் விடாமுயற்சியைக் கண்டு, பிரபல இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவி இயக்குநராகச் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே தமிழ்த் திரையுலகின் புதிய சரித்திரத்திற்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது.

1977-ல் வெளியான '16 வயதினிலே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புரட்சியைத் தொடங்கி வைத்தார். அதுவரை நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவைத் திறந்தவெளி கிராமத்து இயற்கைச் சூழலுக்குக் கூட்டிச் சென்று, மண் சார்ந்த வாழ்வியலை, எதார்த்த காதலை துணிச்சலுடன் பதிவு செய்தார். கமல், ரஜினி, ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இப்படம், பாரதிராஜாவின் பயணத்திற்கு அஸ்திவாரம் போட்டது.

அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என 40-க்கும் மேற்பட்ட காலத்தால் அழியாத காவியங்களை இயக்கித் தள்ளினார். தனது அசாத்திய படைப்புகளுக்காக 6 தேசிய விருதுகளை அறுவடை செய்த இவருக்கு, கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

இயக்குநராக மட்டுமன்றி, ஆயுத எழுத்து, திருச்சிற்றம்பலம், ஈஸ்வரன், ராக்கி, நம்ம வீட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, ரெட்ட சுழி எனப் பல படங்களில் பழுத்த குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்தார். கடந்த ஆண்டு (2025) வெளியான 'நிறம் மாறும் உலகில்' என்ற திரைப்படத்திலும் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உருக வைத்தார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இந்த இமாலயப் பேரிழப்பு ஒட்டுமொத்தத் திரையுலகையும், தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர்திரண்டு வந்து தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.