"எனது சிரிப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது" - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் போர் மூண்டுள்ளது. தவெக அரசு பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பதாக திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது சிரிப்பு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அமைச்சர் கீர்த்தனா தற்பொழுது உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற புதிய அரசுத் துறை சார்ந்த அதிகாரப்பூர்வ அறிமுகக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இயல்பாக வெளிப்படுத்திய சிரிப்பு, கோவை சிறுமி கொலை சம்பவத்தைக் கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் சிலரால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்த சர்ச்சைக்குப் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், "அறிமுகக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நான் இயல்பாகச் சிரித்த ஒரு தருணத்தை, தங்களது சுயநல அரசியல் நோக்கத்திற்காகச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, திட்டமிட்டுத் திரித்துப் பரப்பி வருகின்றனர். கோவையில் 10 வயது பிஞ்சு சிறுமிக்கு நடந்த அந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே எதிரானது. அது என் மனதிற்குப் ஆறாத பெரும் வேதனையை அளித்துள்ளது."
மேலும், இக்கொடூர குற்றத்தில் தவெக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், "இச்சம்பவம் குறித்து அறிந்த அடுத்த கணமே முதலமைச்சர் விஜய் அவர்கள், குற்றவாளிகளைத் தப்பவிடக் கூடாது எனப் போர்க்கால அடிப்படையில் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட காவல்துறையினர், அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே இக்குற்றத்தில் தொடர்புடைய கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இரு முக்கியக் குற்றவாளிகளையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இடமே இல்லை" என்று அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.