"என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது.. Thanks" - அன்புடன் உங்கள் K.பாக்யராஜ்!

 

தமிழ் சினிமா ரசிகர்களையும் ஒட்டுமொத்தத் திரையுலகினரையும் ஒரு நிமிடம் நிலைகுலைய வைக்கும் படியான ஒரு உருக்கமான கடிதம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில், "என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது! Thanks" என்ற வாசகங்களுடன் தொடங்கும் ஒரு நீண்ட கடிதம் பதிவிடப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் மறைந்துவிட்டது போன்ற ஒரு கற்பனையான சூழலை உருவாக்கி, தனது மரணத்திற்குப் பின் ரசிகர்களுக்கு நன்றி கூறுவது போன்ற பாணியில் இந்த உருக்கமான கடிதத்தை பாக்யராஜ் எழுதியதாக இருக்கிறது. 

From the OFFICE of
Director #KBhagyaraj sir pic.twitter.com/ikSx6KwOMt

— K Bhagyaraj (@UngalKBhagyaraj) June 30, 2026


“சந்தோஷத்தில மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது தான் பெரிய சந்தோஷம்...” நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன். அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் - பார்வையாய்!” என்று அதில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

உடல் ஒரு நாள் தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும் என்றும், இறுதியில் எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும் இருக்கும் என்றும் தத்துவார்த்தமாக எழுதியுள்ளார். தனது திரையுலகப் பயணம் மற்றும் மரணத்திற்குப் பிந்தைய நிலை குறித்துப் பேசியுள்ள பாக்யராஜ், தனது மகன் சாந்தனுவின் சினிமா எதிர்காலம் குறித்தும் அந்தக் கடிதத்தில் உருகியுள்ளார்.

"என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். 

நன்றி! நன்றி சொல்வது மனித இயல்பு ! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான்.... நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்! அன்புடன் உங்கள் K.பாக்யராஜ்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.