விஜய்க்கு தான் என் ஆதரவு.. - நடிகை வாணி போஜன்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 'கலர்ஸ் ஹெல்த் கேர்' நிறுவனத்தின் புதிய கிளையான 'கலர்ஸ் 2.0' ஐ நடிகை வாணி போஜன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் மற்றும் சினிமா குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
"நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி மக்கள் பணியாற்ற வந்துள்ளதை நான் மனதார வரவேற்கிறேன். ஒரு குடிமகளாக எனது முழு ஆதரவு எப்போதும் அவருக்கு உண்டு." "அவருக்கு ஆதரவு அளித்தாலும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்காக நான் எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடப் போவதில்லை." "தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அது காலத்தின் கையில் உள்ளது," என்று அரசியல் குறித்த யூகங்களுக்குப் பதிலளித்தார்.
விஜய்யுடன் நடிப்பது குறித்த கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த வாணி போஜன், "விஜய் சாருடன் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், அந்த ஆசை மட்டும் போதாது, அவர் என்னை ஜோடியாக ஏற்க விரும்ப வேண்டுமே! அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்" என்றார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முத்திரை பதித்து வரும் வாணி போஜன், தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அப்டேட் அளித்தார்: இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வலை' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இது தவிர மேலும் நான்கு திரைப்படங்கள் தயாரிப்புப் பணிகளில் இருப்பதாகவும், அவை ஒவ்வொன்றாகத் திரைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.