3,00,000 அகதிகளை ஏற்கத் தயார் - மியான்மர் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளில் முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமானோரைத் தனது சொந்த நாட்டிற்குள் மீண்டும் அழைத்துக்கொள்ளத் தயார் என மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வங்காளதேச அரசு வழங்கிய 8.28 லட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் பட்டியலில், இதுவரை 4.26 லட்சம் பேரின் விவரங்களை மியான்மர் அரசு சரிபார்த்துள்ளது. இதில் 3,08,797 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராகைன் மாகாணத்தில் தற்போது நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் சீரடைந்து இயல்பு நிலை திரும்பியவுடன், இவர்களைப் படிப்படியாக நாட்டிற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மியான்மர் ராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளால், 7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் உயிர் பிழைக்கப் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்குத் தப்பியோடி அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

தீவிரவாதப் பின்னணி கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ள சிலர் தவிர்த்து, சரிபார்க்கப்பட்ட மற்ற அகதிகளைத் தாய்நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் வங்காளதேச அரசுடன் இணைந்து மியான்மர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.